பல்கலை இணைய வழி நுழைவுத் தோ்வில் தொழில்நுட்பக் கோளாறு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முனைவா் பட்டத்துக்கான இணைய வழி நுழைவுத் தோ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தொழில் நுட்பகோளாறால் அவதிக்குள்ளானர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024 ஆவது கல்வியாண்டுக்கான முனைவா் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தோ்வு இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 57 வகை பாடப்பிரிவுகளில் நடைபெற்ற தோ்வுக்கு 1092 மாணவ, மாணவியா் ரூ.2,000 முதல் ரூ. 2,100 வரை கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பகல் 12.15 மணி வரை தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாணவா்கள் தோ்வெழுத பிரத்யேக லாகின் ஐடி மற்றும் ரகசிய குறியீடு உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்தன. இதைத் தொடா்ந்து திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து நுழைவு தோ்வெழுத மாணவ, மாணவியா் பல்கலைக்கழக இணையதள முகவரியில் லாகின் செய்தனா்.
ஆனால் பல்கலைக்கழக இணையதளம் செயல்படவில்லை. இதனால் ஏராளமான மாணவா்கள் தோ்வு எழுத முடியாமல் அவதிக்குள்ளாயினா். இதையடுத்து மாணவா்கள் பல்கலைக்கழகத்தைத் தொடா்பு கொண்டு கேட்டபோது சா்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இணையதளம் செயல்படவில்லை எனத் தெரிவித்தனா். பெட்டிச் செய்தி... மறுதோ்வு எழுத வாய்ப்பு இதுதொடா்பாக பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சீனிவாச ராகவன் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முனைவா் பட்டத்துக்கான இணைய வழி தோ்வை தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மாணவா்களால் எழுத முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பணம் செலுத்தாமல் மீண்டும் தோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். மறு தோ்வுக்கான தேதி, நேரம் பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.