பா.ஜனதா பிரமுகர் வீட்டில் திருடிய வாலிபர் கைது !
கைது
வெள்ளகோவில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் திருடிய வாலிபர் நேற்று கைது செய்யப்பட்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:வெள்ளகோவில் முத்தூர் சாலை டி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆர்.பெரியசாமி (வயது 58). இவருடைய மனைவி ராதாமணி. இவர்களின் ஒரே மகன் உதயமூர்த்தி. இவர் கப்பலில் வேலை செய்து வருகிறார். பெரியசாமி பா.ஜனதா கட்சியில் வெள்ளகோவில் நகர விவசாய அணி தலைவராக உள்ளார்.
பெரியசாமிக்கு சொந்தமான தோட்டம் வெள்ளகோவில் பக்கம் கணபதிபாளையத்தில் உள்ளது. தோட்டத்தில் வேலை இருக்கும் போது 2 அல்லது 3 நாட்கள் தோட்டத்திலேயே தங்கிக்கொள்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் (மே) 19-ந் தேதி காலை தோட்டத்துக்குச் சென்றவர்கள் 21-ந் தேதி அதிகாலை வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது 2 படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்கள் திறந்து கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தோடு, ஒரு பவுன் மோதிரம்,2 பவுன் சங்கிலி மற்றும் ரூ.13 ஆயிரம் திருட்டுப் போனது தெரியவந்தது. பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து வெள்ளகோவில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் மற்றும் போலீசார் முத்தூர்ஈரோடு சாலையில் நொய்யல் ஆற்றுப்பாலம் அருகே நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பெரியசாமி வீட்டின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் பவானி, பாலக்கரை தெருவை சேர்ந்த ரவிக்குமார் மகன் தமிழரசு (24) என்பதும், பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 3¼ பவுன் நகை, திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட கூட்டாளியான பழைய குற்றவாளி பாரத் குமார் என்கிற பரத் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது திருவண்ணாமலை சிறையில் உள்ளார் என்பது தெரியவந்தது.
இவர் மீது மொத்தம் 35 வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் ஈரோடு சிறையில் இருந்த போது பழக்கமாகி இதுவரை திருட்டில் ஈடுபடாத வெள்ளகோவில் பகுதிக்கு வந்து நோட்ட மிட்டு பூட்டி இருந்த வீட்டில் திருடியது தெரிய வந்தது. தமிழரசு காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.