கரூரில் கீழே விழுந்து வாலிபர் படுகாயம்
காவல் நிலையம்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வ உ சி தெரு, இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்க மகன் கார்த்திகேயன். கூலி வேலை செய்து வருபவர்.
இவர் கரூர் அடுத்த, ரங்கநாதன் பேட்டை பகுதியைச் சேர்ந்த முத்துவேல் வயது 30 என்ற பில்டிங் கான்ட்ராக்டரிடம் கட்டுமானபணியில் ஈடுபட்டு வந்தார். அதே சமயம், முத்துவேல் தனது நிறுவனத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு, பணியின் போது அணிய வேண்டிய முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், காக்காவாடி வி கே பாலிமர் நிறுவனத்தின் முன்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் ஜனவரி 2ஆம் தேதி மதியம் 12 மணியளவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, கார்த்திகேயன் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கார்த்திகேயனுக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த கார்த்திகேயன் மனைவி துர்கா தேவி வயது 33 என்பவர், இது குறித்து வெள்ளியணை காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தொழிலாளர்கள் பணியின்போது அணிய வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை அளிக்காத முத்துவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.