லிப்ட் கொடுத்தவரை தாக்கி திருட முயன்ற வாலிபர்கள் கைது
கைது செய்யப்பட்டவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி இவர் பெயிண்டராக பணி பரிந்து வருகிறார், இவர் தினந்தோறும் பெருமாள்மலை பகுதியில் இருந்து சுமார் 12கிலோ மீட்டர் தூரம் கொடைக்கானலுக்கு இருசக்கர வாகனத்தில் மலைச்சாலையில் பயணித்து தனது பெயிண்டர் பணியை முடித்து அதே சாலையில் மீண்டும் வீடு திரும்புவது வழக்கம், இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தனது பணியை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்,அப்போது மலைச்சாலையில் செண்பகனூர் பிரிவு அருகே மூன்று இளைஞர்கள் லிப்ட் கேட்டு நுழைவாயில் சோதனை சாவடியில் இறங்கிவிடுமாறு கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்,
அப்போது நுழைவுவாயில் சோதனை சாவடிக்கு முன்பே மூன்று இளைஞர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்த பட்டா கத்தியை தலையில் வெட்டியுள்ளார்,உடனே சுதாரித்த முனியாண்டி இருசக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டு விட்டு உயிருக்கு பயந்து ஓடி சாலையில் சென்ற வாகனத்தில் தலையில் ரத்தம் வடிவதுடன் உதவி கேட்டுள்ளார்,அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இறங்கி முனியாண்டிக்கு உதவிய போது மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர்,இதனையடுத்து முனியாண்டி கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தலையில் 8 தையல் போடப்பட்டுள்ளது,தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிக்க மலை சாலையில் நடந்து சென்று பெருமாள்மலை பகுதியில் இருந்து பேருந்தில் ஏறி வத்தலக்குண்டை நோக்கி சென்றுள்ளனர்,இது குறித்த தகவல் கிடைக்கவே காவல் துறையினர் கெங்குவார்பட்டி சோதனை சாவடியில் இந்த இளைஞர்களை பிடித்து, கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது மதுரை,திடீர் நகரை சேர்ந்த சிவக்கார்த்திகேயன்(20), சங்கரேஸ்வரன்(19) மற்றும்15 வயது சிறுவன் (10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிறுவன்) என்பதும்,இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்று இருசக்கர வாகனத்தை திருடி செல்ல திட்டமிட்டதாகவும்,15 வயது சிறுவன் தலையில் வெட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் சிவகார்த்திகேயன்,சங்கரேஸ்வரன் உள்ளிட்ட இருவர் மீதும் வழிப்பறி,திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பொதுமக்கள் தெரியாதவர்கள் யாரும் இது போன்று லிப்ட் கேட்டால் யாரும் லிப்ட் தர வேண்டாம் என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.