பைரவநாத மூர்த்தி கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
சிறப்பு பூஜை
மல்லசமுத்திரம் அருகே உள்ள, மோர்பாளையத்தில் சுமார் 400ஆண்டுகள் பழமை வாய்ந்த பைரவநாத மூர்த்தி கோவில் உள்ளது. சனி, ராகு, கேது, பைரவர் தோஷங்கள் விலகும் கோயிலாக உள்ளது. இந்த கோயிலில் சிறப்பம்சமாக மூலவர் கிழக்கு நோக்கி உள்ளார். தனி சிறப்பு சன்னிதியாக கருதப்படுகிறது. மற்ற இடங்களில் பைரவர் தெற்கு நோக்கி தான் உள்ளார்.
நேற்று, தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் பலவண்ண திரவியங்களை கொண்டு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. நீர்பூசணி, தேங்காய் உள்ளிட்டவற்றில் நெய்விளக்கு ஏற்றி பெண்கள் கோயில் முன்பு வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பகல் 12மணிக்கு உற்சவமூர்த்தி அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் கோவிலை சுற்றி வலம் வந்தார். திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஜாதகங்கள் சுவாமியின் பாதத்தில் வைத்து விரைவில் திருமணம் ஆகவேண்டி பூஜை செய்து வழிபட்டனர். சேலம், ஈரோடு, கரூர், மதுரை, நாமக்கல் மற்றும் உள்ளூர்சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்தது பக்தர்கள் வந்திருந்தனர்.
இதில், 1000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, பைரவ நாதமூர்த்தி குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.