கோவில் உண்டியல் உடைப்பு: போலீசார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காகித ஆலை செல்லும் சாலையில் அம்மன் நகர் என்ற பகுதியில் கண்ணனூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆடி மாதத்திலும் வெகு விமர்சையாக இந்த கோவில் திருவிழா நடைபெறும் .இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் அரசுக்கு சொந்தமான கோவில் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கம் போல கோவில் பூசாரி ராஜ் கமல் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், நேற்று அதிகாலை வந்து பார்த்த பொழுது, கோவிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .உள்ளே சென்று பார்த்த பொழுது இந்து அறநிலை துறைக்கு சொந்தமான கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து உண்டியல் காணிக்கைகள் திருடி செல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கும், பள்ளிபாளையம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவிலில் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் பூட்டை அருகில் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த சுமார் 35 ஆயிரம் ரூபாய் உண்டியல் காணிக்கை தொகையை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் இந்த பகுதியில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சுற்றிய சந்தேகத்திற்கிடமான மூன்று பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கண்ணனூர் மாரியம்மன் கோவில் பகுதியை சுற்றிலும் ஏராளமான விசைத்தறிக்கூடங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால்,
அந்த பகுதி முழுவதும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டதை பயன்படுத்தி கொள்ளையர்கள் கோவில் உண்டியல் காணிக்கை தொகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது..இந்த சம்பவம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.