15 அடி ஆழத்தில் கோவில்... ஆனால், கனமழையிலும் தண்ணீர் தேங்கவில்லை
செம்பரம்பாக்கம் ஏரிக்கரை மீது 15 அடி ஆழத்தில் அமைந்துள்ள கன்னியம்மன் கோவிலில், கனமழையிலும் தண்ணீர் தேங்காதது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கரை மீது 15 அடி ஆழத்தில் அமைந்துள்ள கன்னியம்மன் கோவிலில், கனமழையிலும் தண்ணீர் தேங்கவில்லை என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர். குன்றத்துார் அருகே, செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் 19 கண் மதகு அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரையின் மீது, 15 அடி ஆழத்தில் கன்னிஅம்மன் கோவில் அமைந்துள்ளது. மன்னர் காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி உருவாக்கப்பட்ட போது, ஏரிக்கரையின் மீது காவல் தெய்வமாக இக்கோவில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: இதுவரை எவ்வளவு கனமழை பெய்தாலும், இந்த கோவிலின் உள்ளே 1 செ.மீ., உயரத்திற்கு கூட தண்ணீர் தேங்கியது இல்லை. தண்ணீர் தேங்காத வகையில் கட்டப்பட்டிருப்பது இக்கோவிலின் சிறப்பு. மேலும், குன்றத்துார் பகுதியை சுற்றியுள்ள பலர், இந்த அம்மனை குல தெய்வமாக வழிபட்டு செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.