தென்காசி: ஊருக்குள் புகுந்த யானை மயங்கி விழுந்து உயிரிழப்பு

தென்காசி:  ஊருக்குள் புகுந்த யானை மயங்கி விழுந்து உயிரிழப்பு

இறந்த யானை 

தென்காசி அருகே பகவதிபுரம் பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் புளியரை வனப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள பகவதிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை அந்தப் பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி நடமாடியது. அதனைத் தொடர்ந்து பூலாங்குடியிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள தோப்புகளிலும் சுற்றி திரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் பகவதிபுரம் பகுதியில் நடமாடிய ஒற்றை யானையை தீவிரமாக தேடி அலைந்தனர்.

அப்போது ஒரு மாந்தோப்புக்குள் அந்த யானை சோர்வான நிலையில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றதை பார்த்தனர். இதனைப் பார்த்து வனத்துறையினர் இந்தக் காட்டு யானைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் மிகவும் சோர்வாக காணப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு உடனடியாக அதற்கு தேவையான தண்ணீர் மற்றும் தர்பூசணி பழம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அருகில் வைத்தனர். அதனை தின்ற யானை அதன் பிறகும் சோர்வாக காணப்பட்டது.

நேற்று திடீரென அந்த யானை மயங்கி விழுந்து இறந்தது. உடனடியாக வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர். அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்த போது மயக்க நிலையிலையே அந்த யானை உயிரிழந்தது தெரியவந்தது. இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story