நாகர்கோவில்  குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து 

நாகர்கோவில்  குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து 
இன்று காலை முதல் குப்பை கிடங்கில் தீ
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 130 டன் குப்பைகள் குவிவதாக தெரிகிறது. இந்த குப்பைகளை பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்தக் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். காரணம் கடந்த 1 ஆண்டில் மட்டும் 13 முறை இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருவது வாடிக்கை.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலம் வந்தது. இதை பார்த்த அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

அந்த பகுதி வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். மூச்சு திணறல் ஏற்பட்டதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு சென்றனர். தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story