அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய ஜவுளி உற்பத்தியாளர்கள்
கட்டில்கள் வழங்கிய ஜவுளி உற்பத்தியாளர்கள்
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். உள் நோயாளிகளாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். 2016, பிப். 27ல் குமாரபாளையம் தாலுக்கா அந்தஸ்து பெற்றது. ஆனால் இந்த மருத்துவமனை தாலுக்கா அந்தஸ்துக்கு ஏற்றபடி, போதிய கட்டிட வசதி, படுக்கை வசதி, சிகிச்சை வசதி, டாக்டர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை கூடுதலாக்குதல் ஆகியன ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
சாலை விபத்து, அவசர சிகிச்சை என்றால் ஈரோடு அல்லது சேலம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைப்பது வழக்கமாக உள்ளது. இதனால் பல நோயாளிகள் உயிரிழப்புக்கு காரணமாக அமைகிறது. தாலுக்கா அந்தஸ்துக்கு தரம் உயர்த்த உரிய நடவடிக்கைகள் உடனே எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயினும், அரசியல் கட்சியினர், லயன்ஸ், ரோட்டரி, பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு சேவா சங்கத்தினர், இந்த மருத்துவமனைக்கு தேவையான பொருட்களை வழங்கி உதவி வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், இந்த மருத்துவமனைக்கு 10 கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் வழங்கினர். தலைமை டாக்டர் பாரதியிடம், சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்று இதனை வழங்கினர்.