சாமிதோப்பு  தலைமைபதியில் தை திருவிழா கலிவேட்டை

சாமிதோப்பு  தலைமைபதியில் தை திருவிழா கலிவேட்டை
சாமித்தோப்பு கலிவேட்டை துவக்க நிகழ்ச்சி
கன்னியாகுமறி மாவட்டம், சாமிதோப்பு பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட சாமி தலைமை பதியில் தைகலிவேட்டையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமை பதியில் தைதிருவிழா கடந்த 19 -ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடந்து வருகிறது. விழாவின் 8–வது நாளான நேற்று அதிகாலையில் நடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை போன்றவை நடந்தன. மாலை 5.30 மணிக்கு அய்யா கலி வேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வீற்றிருக்க கலி வேட்டைக்கு வாகனம் புறப்பட்டது. வாகன பவனிக்கு குரு சுவாமி தலைமை தாங்கினார்.

கலிவேட்டைக்கு புறப்பட்டு தலைமை பதியை சுற்றி வந்த வாகனம், நான்கு ரகவீதிகளையும் சுற்றி இரவு 8 மணிக்கு முத்திரி கிணற்றங்கரையை சென்றடைந்தது. அங்கு திரளான பக்தர்கள் முன்னிலையில் கலி வேட்டை நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, அய்யா குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வாகனத்திற்கு அந்த பகுதி மக்கள் சுருள் வைத்து வழிபாடு செய்தனர். வாகனம் தலைமை பதியை வந்தடைந்த பின்பு, அய்யா வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. கலிவேட்டை நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) அனுமன் வாகனபவனி நடக்கிறது.

Tags

Next Story