நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தை திங்கள் சிறப்பு அபிஷேக அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சநேயர்



தை மாத பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1008 வடை மாலை அலங்காரம் நடைபெற்றது. நேற்று தை மாதம் முதல் தேதி மற்றும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயில் பிரகாரத்தில் கரும்புகள் தோரணமாக கட்டி வைக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு 1,008 வடைமாலை சார்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சனம், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம், உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கனகாபிசேகத்துடன் அபிஷேகம் நிறைவு பெற்றது.பல்வேறு நறுமண புஷ்பங்கள் கொண்டுபுஷ்பாஞ்சலி நடைபெற்றது. பிறகு 10 சவரன் மதிப்பு கொண்ட டாலர் செயின் ஆஞ்சநேயர் கரங்களில் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தை மாதம் பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறையால் வழக்கத்தை விட ஆஞ்சநேயர் கோயிலில் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.




