சேலத்தில் மகனுடன் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
கோப்பு படம்
சேலம் அன்னதானப்பட்டி புதுகந்தப்ப காலனி, கணபதி நகரை சேர்ந்தவர் விஜயகுமார். வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 40). இவர் நேற்று முன்தினம் மாலை தனது மகன் மணிகண்டனுடன் அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அவர்களது பின்னால் மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் திடீரென்று மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள 8¾ பவுன் தாலி சங்கிலியை பறித்தார். அப்போது மகேஸ்வரி தாலி சங்கிலியை கையில் பிடித்து கொண்டு போராடினார். தொடர்ந்து மணிகண்டனும் அந்த வாலிபரிடம் போராடினார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அதற்குள் அந்த வாலிபர் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மொபட்டில் தப்பி சென்றார். இது குறித்து மகேஸ்வரி அன்னதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து தாலி சங்கிலியை பறித்து கொண்டு ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். முதல் கட்டமாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த வாலிபர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.