சேலம் வழியாக தாம்பரம்- மங்களூரு சிறப்பு ரெயில்
பைல் படம்
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. அதன்படி தாம்பரத்தில் இருந்து சேலம், ஈரோடு, கோவை வழியாக மங்களூருவுக்கு கோடை சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் தாம்பரம்- மங்களூரு சிறப்பு ரெயில் (06049) வருகிற 19, 26-ந் தேதிகளில் மற்றும் மே மாதம் 3, 10, 17, 24, 31-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் மதியம் 1.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலத்திற்கு இரவு 7.47 மணிக்கு வந்து சேரும். பின்னர் 3 நிமிடத்தில் புறப்பட்டு ஈரோட்டிற்கு இரவு 8.45-க்கும், திருப்பூருக்கு இரவு 9.38 மணிக்கும், கோவைக்கு 10.37 மணிக்கும் சென்று பாலக்காடு, ஒட்டப்பாலம், திரூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு வழியாக மங்களூருவுக்கு அடுத்தநாள் (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு சென்றடைகிறது.
அதேபோல், மறுமார்க்கத்தில் மங்களூரு- தாம்பரம் சிறப்பு ரெயில் (06050) வருகிற 21, 28 மற்றும் மே 5, 12, 19, 26, ஜூன் 2-ந் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. மங்களூருவில் மதியம் 12 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், கோழிக்கோடு, பாலக்காடு வழியே கோவைக்கு இரவு 7.32 மணிக்கு வந்து சேருகிறது. அதன்பிறகு திருப்பூருக்கு இரவு 8.18-க்கும், ஈரோட்டிற்கு இரவு 9.05-க்கு வந்து சேலத்திற்கு இரவு 10.12 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் 3 நிமிடத்தில் புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியே தாம்பரத்திற்கு அடுத்த நாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.