பேராவூரணி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆதனூரில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள ஆதனூர் பெரிய ஏரி மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த பெரிய ஏரி நிரம்பி வேம்பன்குளம் ஏரிக்குத் தண்ணீர் செல்கிறது. வேம்பன்குளம் ஏரி நிரம்பி கொரட்டூர் குளத்திற்குச் செல்கிறது. இந்த பெரிய ஏரியின் நடுவே மதகு பாலம் அமைத்து விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்குச் செல்ல தார்ச்சாலை போட்டனர்.இந்த மதகு பாலம் விவசாய பொருட்கள் ஏற்றி வரும்பொழுது சுமை தாங்க முடியாமல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து விட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய பாலம் கட்ட வேண்டும் என அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்தும், மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், சாலை புதிதாக போடுவதாகச் சொல்லி, சாலையில் உள்ள கப்பிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டும் வேலை நடைபெற்று வருகிறது. பழுதடைந்த பாலத்தை அப்படியே விட்டுவிட்டு, சாலை மட்டும் போடப்போவதாகக் கூறப்படுகிறது.

எனவே, பாலம் அமைக்காமல் சாலை போடுவதால் விவசாயிகள் விவசாய எந்திரங்களையோ, விவசாய பொருட்களையோ கொண்டு செல்ல முடியாது. எனவே, சாலை போடும் போது பாலத்தையும் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் மூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சித்திரவேலு, ஒன்றிய தலைவர் கருப்பையா, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ், மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story