தஞ்சை : செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சை : செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி  ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் எம்.மணி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமல்நாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் மேல்மா சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகளை கைது செய்து, சிறையில் அடைத்தவர்களை உடன் விடுவிக்க வேண்டும். அவர்கள் மீது பதியப்பட்ட குண்டர் சட்டம் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். அறவழியில் தங்களது உரிமைகளுக்காக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்ய பரிந்துரைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், விவசாயிகளின் அறப்போராட்டத்தை ஒடுக்க முயலும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரை தமிழக முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அறவழியில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ததால், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் விவசாயிகளிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.செய்யாறு விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய விவசாயி அருளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் வழங்கினர்.

Tags

Next Story