தஞ்சாவூர் : நீட் தேர்வில் 5,188 பேர் பங்கேற்பு
பைல் படம்
இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இந்தியா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. தஞ்சையில் தாமரை பன்னாட்டு பள்ளி, மேக்ஸ்வெல் மெட்ரிக் பள்ளி, பிளாசம் பப்ளிக் ஸ்கூல், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல் கலைக்கழகம், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி, அரசு பொறியியல் கல்லுாரி, பட்டுக் கோட்டை லாரல் சிபிஎஸ்இ பள்ளி ஆகியவற்றில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
தேர்வு எழுத காலை 11 மணி முதல் மாணவர்கள் பெற்றோர்கள், உறவினர்களுடன் வருகை தந்தனர். இந்த தேர்வை எழுத தஞ்சை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு இணைய வழியாக நுழைவு சீட்டு அனுப்பப்பட்டது. இதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொண்டனர். 11.30 மணி முதல் தேர்வு எழுதும் அறைக்கு மாணவர்கள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைக்குள் மாணவர்கள் செல்போன், கால்குலேட்டர், கைக் கடிகாரம், மணிபர்ஸ் போன்ற வற்றை எடுத்துச்செல்லவும், தோடு, மூக்குத்தி போன்றவைகளை அணிந்து செல்லவும் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 5 ஆயிரத்து 375 பேரில் 187 பேர் தேர்வு எழுத வரவில்லை. எனவே 5 ஆயிரத்து 188 பேர் நீட் தேர்வை எழுதினர். தேர்வு எழுதும் மையங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.