வியாபாரியிடம் 7 கிலோ வெள்ளி நகை கொள்ளை

வியாபாரியிடம் 7 கிலோ வெள்ளி நகை கொள்ளை

பைல் படம் 

தஞ்சாவூரில், வெள்ளி வியாபாரியிடம் 7 கிலோ வெள்ளி நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ் ராம் மகன் கர்தாராம் (28). இவர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள நாணயக்காரச் செட்டித் தெருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி வெள்ளி நகைகளை மொத்தமாக வாங்கி தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், வெள்ளிக் கொலுசு, மெட்டி உள்பட 12 கிலோ வெள்ளி நகைகள் நிரப்பப்பட்ட பையை வெள்ளிக்கிழமை எடுத்துக் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள நகைக் கடைகளில் 5 கிலோ விற்பனை செய்துவிட்டு, மீண்டும் இரவு தஞ்சாவூருக்கு வந்தார்.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்கூட்டரில் முன் பக்கம் 7 கிலோ நகைகள் இருந்த பையை வைத்துக் கொண்டு, தன்னுடன் தங்கியுள்ள ஆசுராமுடன் தெற்கு அலங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர்கள் பின்னால் இரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து 6 மர்ம நபர்கள் வந்தனர். திருவள்ளுவர் வணிக வளாகம் அருகே சென்ற கர்தாராமின் ஸ்கூட்டரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து அவரது முகத்தில் மிளகாய் பொடியைத் தூவினர். இதனால், கர்தாராமும், ஆசுராமும் நிலை தடுமாறி கீழே விழ முயன்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து மர்ம நபர்களில் சிலர் இறங்கி 7 கிலோ வெள்ளி நகைகள் இருந்த பையைப் பறித்துச் சென்றனர்.

இதைப் பார்த்து பிடிக்க முயன்ற கர்தாராமையும், ஆசுராமையும் மர்ம நபர்கள் அரிவாளைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர். தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொள்ளையர்கள் சிவகங்கை பூங்கா வழியாக தப்பிச் செல்வதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறினர். இதன் பேரில் காவல் துறையினர் சிவகங்கை பூங்கா வழியாக செக்கடி பகுதிக்குச் சென்றபோது, அங்கு கிடந்த மோட்டார் சைக்கிளை காவல் துறையினர் கைப்பற்றினர்.

வேகத்தடையில் வேகமாகச் செல்லும்போது கொள்ளையர்கள் நிலை தடுமாறி விழுந்ததில், மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு, தப்பியோடியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், நிகழ்விடத்தில் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். கர்தாராம் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொள்ளை போன வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ. 5.50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் நிறைந்த தெற்கு அலங்கத்தில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story