தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் தொடங்க அனுமதி
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 20,315 நபர்களுக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது.
சமீபத்தில், நிதி ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலை குறியீடு தரவரிசைகளின்படி, 80.89 புள்ளிகளுடன் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ள தமிழ்நாடு, மின்னணுவியல் ஏற்றுமதியிலும் முதல் இடத்தில் உள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் கொண்ட மாநிலங்களில் முதலிடத்திலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில்,
அகில இந்திய அளவில், இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் தொழில் புரிவதற்கு சிறந்த மாநிலங்களுள் ஒன்றாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது. மேலும், ஏற்றுமதித் தொழில்களுக்கான தயார்நிலைக் குறியீட்டில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அவ்வழியில் தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் பங்களிப்பு அளிக்கிறது. மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், தெரிவித்ததாவது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் வாயிலாக, இயந்திரத்தளவாடங்கள் மீதான முதலீட்டு மானியம் 15 விழுக்காடிலிருந்து 25 விழுக்காடாக உயர்வு செய்ததன் அடிப்படையில் இம்மாவட்டத்தில்,
கடந்த 01.05.2021 முதல் 31.11.2023 வரை குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக ரூ.1044.85 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின் மானியமாக ரூ. 44.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ், 270 படித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1076.96 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.268.99 லட்சம் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 67 பயனாளிகளுக்கு ரூ.4579.72 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ. 455.28 லட்சம் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரால் கடந்த 12.05.2023 முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்புக் கடன் திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற பெயரில் துவங்கப்பட்டு,
தற்போது வரை 138 விண்ணப்பங்கள் ரூ.1064.57 லட்ச திட்ட மதிப்பீட்டில் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 52 நபர்களுக்கு ரூ.230.56 லட்சம் திட்ட மதிப்பீட்டிற்கு கடன் ஒப்பளிப்பு பெறப்பட்டு 3 பயனாளிகளுக்கு ரூ.15.20 லட்சம் மானியம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், 19,259 பொதுப்பிரிவினருக்கும், 1,056 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் புதிய தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக தொழில் தொடங்க விழைபவர்கள் மாவட்டதொழில் மையம் மூலம் மானியத்துடன் கடனுதவி பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.