தஞ்சாவூர் திமுக வேட்பாளர் முரசொலி வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல்
தஞ்சாவூர் திமுக வேட்பாளர் முரசொலி வேட்புமனு தாக்கல் செய்தார்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி புதன்கிழமை தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப்பிடம் தாக்கல் செய்தார். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை சுயேச்சை வேட்பாளர்கள், தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான மார்ச்.27ஆம் தேதி புதன்கிழமை திமுக வேட்பாளர் ச.முரசொலி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, தஞ்சாவூர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்டு தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தார். பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப்பிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது எம்.பி., எஸ் எஸ் பழனிமாணிக்கம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், இந்திய கம்யூனிஸ்ட் வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் அவருக்கு முன்மொழிந்தனர். வேட்பாளர் முரசொலியுடன் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தஞ்சாவூர் எம்எல்ஏவுமான டி.கே.ஜி. நீலமேகம், எம்எல்ஏக்கள் பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர்.
Next Story