தஞ்சாவூரில் ஜன. 26-இல் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி நடத்த  முடிவு

தஞ்சாவூரில் ஜன. 26-இல் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி நடத்த  முடிவு


பைல் படம்


தஞ்சாவூரில் ஜன. 26-இல் டிராக்டர்கள் பேரணி நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்துள்ளனர்

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக தஞ்சாவூரில் ஜனவரி 26 ஆம் தேதி டிராக்டர்கள் பேரணி நடத்துவது என ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்களைப் பாதுகாக்க வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை இரு நூறு நாள்களாக வழங்கி விவசாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும். ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசு கார்ப்பரேட் சார்பு ஆட்சி நடத்துவது, விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு எதிரான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதைக் கண்டித்தும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிவடைந்த பிறகு தஞ்சாவூரில் டிராக்டர்கள் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி. கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தெற்கு மாவட்டத் தலைவர் ஆர். ராமச்சந்திரன், வடக்கு மாவட்டச் செயலர் சாமு. தர்மராஜன், மக்கள் அதிகாரம் தேவா, ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த எஸ். ஞானமாணிக்கம், ராஜேந்திரன், கே.தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story