தஞ்சையில் ரூ.13.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா அரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் மரு. அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.
இதில், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.4,29,450 மதிப்பீட்டில் 210 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக ரூ.66,900 மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தையல் இயந்திரம் ரூ.1,30,000 மதிப்பீட்டில் 13 நபர்களுக்கும், இயற்கை மரணம் ஈமச்சடங்கு நல வாரிய உதவித் தொகை ரூ.2,55,000 மதிப்பீட்டில் 15 நபர்களுக்கும், மோட்டார் பொருத்தப்பட்ட பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி ரூ.4,20,000 மதிப்பீட்டில் 4 நபர்களுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பாக விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் ரூ.56,340 மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் ரூ.13,57,690 மதிப்பீட்டில் 262 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் சங்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்