தஞ்சாவூர் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை 37-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை கல்லூரி முதல்வர் அ.ஜான்பீட்டர் வரவேற்றார். விழாவில் இளங்கலையில் 1,335 மாணவிகளுக்கும், முதுகலையில் 296 மாணவிகளுக்கும் என மொத்தம் 1,631 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் பேசியதாவது: இந்தக் கல்லூரி பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்குகிறது.
இந்த கல்லூரியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவதில் பெருமை அடைகிறேன். இக்கல்லூரியில் படித்த மாணவிகள் முதலில் தமிழக அரசுக்கும், அதனைத் தொடர்ந்து கல்லூரியின் பேராசிரியர்களுக்கும், இறுதியாக பெற்றோர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். பட்டம் பெற்ற மாணவிகள் இதோடு தங்களது கல்வியை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து உயர்கல்வி பயில வேண்டும். தான் படித்த கல்வியை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற கால கட்டத்தில் இருக்கிறீர்கள், எனவே நீங்கள் அனைத்து துறைகளிலும் ஈடுபட வேண்டும்.
அதே போல் பெண்கள் படித்த கல்வியின் மூலம் வீட்டுக்கும், சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் உதவிட முன் வர வேண்டும். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்பது அது விளையாட்டு பொருள் அல்ல, அந்த பொம்மையில் வாழ்வியல் தத்துவம் அடங்கியுள்ளது. கீழே சாய்ந்தாலும் தானாக மீண்டும் நிமிர்ந்து கொள்ளும், அதே போல் நாம் வீழ்ந்தாலும் தன்னம்பிக்கையுடன் மீண்டும் எழ வேண்டும், இந்த பொம்மை ஒவ்வொரு வீ்ட்டிலும் இருக்க வேண்டும். அதை பார்க்கும் போது நமக்கு ஒரு உந்துதல் ஏற்பட வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கடுமையாக உழைத்ததால் நாடே அவரை போற்றி கொண்டாடியது. அதே போல் ஒவ்வொரு மாணவிகளும் கடுமையாக உழைத்து குடும்பத்தையும், நாட்டையும் முன்னேற்றத்துக்கு கொண்டு வர வேண்டும்" என்றார். விழாவில், தேர்வு நெறியாளர் தெ.மலர்விழி, இணைப்பேராசிரியைகள் பு.இந்திராகாந்தி, வே.வினோபா, சீ.வைஜெயந்தி மாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.