தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் உறக்க ஆய்வகம் தொடக்கம்
உறக்க ஆய்வகம்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட உறக்க ஆய்வகம் இன்று தொடங்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் கூறியதாவது, "தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் அதிநவீன பிரான்கோஸ்கோபி என்கிற மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவியும், உறக்க ஆய்வகமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நிறைய பேருக்கு உடல் பருமன் காரணமாக குறட்டைச் சத்தம் உருவாகி தூக்கமின்மை நோய் ஏற்படும். இதனால், உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் கண்காணிப்பதற்கான பரிசோதனைக் கூடமாக உறக்க ஆய்வகம் செயல்படும்.
இரவு நேரத்தில் தூங்கும்போது தொண்டையில் சதை வளருதல், உடல் பருமன் அல்லது வேறு காரணங்களால் உடலில் மாறுபாடு தெரியும். இப்பிரச்னை காரணமாக அவர்களது பகல் நேர செயல்பாடு குறைதல், ரத்த அழுத்தம், சர்க்கரை சத்து பிரச்னைகளை உருவாக்கும். இதை பரிசோதனை செய்து உறுதிப்படுத்துவதற்கும், பரிசோதனையின்போது உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் கண்காணிப்பதற்கும் முதல் முறையாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறக்க ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் இந்தப் பரிசோதனைக்கு ரூ. 5 ஆயிரம் செலவாகும். இதை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படும். இந்தப் பரிசோதனை இரவு நேரத்தில் தூங்கும்போது மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனையில் குறட்டை வரும்போது உடலில் ஏற்படும் மாற்றம், ஆக்ஸிஜன் அளவு குறைவது, இதயத்தில் மாறுபாடு போன்றவை 6 மணிநேரத்துக்கு பதிவாகும். இதனால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு மட்டுமே பரிசோதிக்க முடியும். இந்தப் பரிசோதனை தஞ்சாவூரில் வேறு எங்கும் கிடையாது. அரசு மருத்துவக்கல்லூரிகளைப் பொருத்தவரை சென்னை, மதுரைக்கு அடுத்து தஞ்சாவூரில்தான் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், தொண்டை, மூச்சுக்குழாயில் பட்டன், கோழி எலும்பு, மீன் முள், கொக்கிகள் போன்றவை சிக்கிக் கொண்டால் எடுப்பது சிரமம். இதை மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் விடியோ திரையில் பார்த்துக் கொண்டே தொண்டை, மூச்சுக்குழாயில் சிக்கியதை நிறைய சேதாரம் ஏற்படாமல் எடுத்துவிட முடியும். தவிர, மூச்சுக்குழாயில் ஏற்படக்கூடிய சாதாரண கட்டிகள், புற்றநோய்க் கட்டிகள் போன்றவற்றையும் கண்டறியலாம். இந்தப் பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ. 10 ஆயிரம் செலவாகும். இதை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படும். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரை 18 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கும் தமிழக அரசு அங்கீகாரச் சான்று வழங்கியுள்ளது" என்றார்