கனிமொழியால் கண் சிகிச்சை பெற்ற மாணவி நன்றி!
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி நேற்று (14/04/2024) திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு ஆத்தூர் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கனிமொழி கருணாநிதியால் கண் சிகிச்சை பெற்ற மாணவி ரேவதியை கண்டதும், தனது பிரச்சார வாகனத்தில் ஏற்றி நலம் விசாரித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கனிமொழி கருணாநிதி எம்.பி. கடந்த டிச. 27இல் பார்வையிட்டார்.
அப்போது, திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப்பழங்கரை கிராமத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை குறைபாடு குறித்து விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியவர், தனக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாகவும், அதற்கு மருத்துவச் சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். சரி செய்துவிடலாம் என நம்பிக்கையும், ஊக்கமும், உற்சாகமும் அந்த சிறுமிக்கு அளித்தார்.
அதைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டின் பேரில், அந்தச் சிறுமிக்குத் திருநெல்வேலி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் அன்று (ஜனவரி 2024 6-ந் தேதி) காலை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாலை வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்துக்குச் சென்று சிறுமி ரேவதியைச் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அவருக்குச் சிறுமி நன்றி தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த அந்த சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறினார்.
மேலும் அன்று (13/01/2024) தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில், கனிமொழி கருணாநிதியை சொக்கப்பழங்கரை கிராமத்தைச் சார்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரேவதி சந்தித்து நன்றி தெரிவித்தார். கனிமொழி எம்.பி.யின் சொந்த நிதியின் மூலம் கண் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு,தற்போது கண் நன்றாகத் தெரிகிறது என்று கூறினார். சிறு வயதில் மஞ்சள் காமாலை நோயினால் மாணவி ரேவதிக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது. தங்கையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி மாணவி ரேவதிக்கு அறிவுரை கூறினார்.