தரங்கம்பாடி : சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் ஆலய தேரோட்டம்
தேரோட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது .சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றாக திகழும் இக்கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கோயில் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் எழுந்தருள செய்து சிறப்பு தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வீதிகள் தோறும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து மாவிளக்கு இட்டும், பால்குடம் எடுத்தும்,அங்க பிரதட்சனம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.