மாசித் திருவிழாவின் 5-ம் திருநாளான நேற்று குடவருவாயில் தீபாராதனை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 5-ம் திருநாளான நேற்று குடவருவாயில் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனத்திலும் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். 5-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. இரவு 7.15 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டு, குடவருவாயில் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.