குறைந்த செலவில் அதிக லாபம் தரும் எள் பயிர் சாகுபடி....

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் எள் பயிர் சாகுபடி....

 எள் பயிர் 

எள் பயிர் சாகுபடி தொடர்பாக வேளாண் உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

குறைந்த செலவில் அதிக வருமானம் தரும் எள் பயிரினை சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிக பராமரிப்பு இல்லாமல் குறைந்த செலவில் நல்ல வருவாய் தருவது எள் சாகுபடி ஆகும்.

இது குறித்து பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா கூறியிருப்பதாவது: குறைந்த வயதில் 85 நாட்களில் அதிக நீர் தேவை இன்றி குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய பயிர் எள் ஆகும். எள் சாகுபடியில் ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை அளவே போதுமானது ஆகும்.

எள் பயிர் அனைத்து வகையான மண்ணிலும் நன்றாக வளரும். எள் பயிரில் வெள்ளை கருப்பு, சிவப்பு போன்ற ரகங்கள் உள்ளது. சித்திரை மாதத்தில் வி.ஆர்.ஐ.2,3, டி.எம். பி.7,6 கோ போன்ற ரகங்கள் உகந்ததாகும். சித்திரை மாதத்தில் இரண்டு முறை கோடை உழவு செய்து மண்ணை நன்கு கலைத்து விட வேண்டும் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்காக உயிர் பூஞ்சானக் கொல்லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் என்ற விகிதத்தில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைகள் மிகவும் லேசாக இருப்பதால் மணலுடன் கலந்து விதைக்க வேண் டும். சலித்த சுத்தமான மணலை விதையின் அளவுக்கு சம அளவு கலந்து சீராக நிலத்தில் தூவி விட வேண்டும். பிறகு குச்சியை வைத்து வைத்து இழுத்து செல்லும்போது விதைகள் மண்ணில் அழுந்த புதைந்து விடும்.

பின்னர் 15ம் நாள் 15 சென்டிமீட்டர் இடைவெளியை வைத்து செடியை கலைத்து விட வேண்டும் விதைத்த 30ம் நாள் 30 சென்டிமீட்டர் இடைவெளி வைத்து மீண்டும் ஒருமுறை செடியை கலைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் அதிக கிளைகள் வெடித்து அதிக காய்கள் பிடிக்கும். விதை விதைத்ததுடன் ஒரு முறையும், 7ம் நாள் ஒரு முறையும், பூக்கும் தருணம் ஒரு முறையும்,காய் பருவத்தில் ஓர் இரவு முறையும் நீர் பாசனம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றி அதிகமாக மகசூல் பெற்று பயன் பெறுமாறு பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story