ஆந்தையை வனத்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பறக்க முடியாமல் தரையில் சுற்றித்திரிந்த ஆந்தையை, ஆட்டோ டிரைவர் ஒருவர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்துகடையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் அருகே ஆந்தை ஒன்று பல மணி நேரமாக பறக்க முடியாமல் தரையில் நின்று கொண்டு இருந்துள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் ஆந்தையை பார்த்தவுடன் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கூன்டுடன் வந்த வனத்துறை ஊழியர்கள் ஆந்தையை பிடித்தால் கொத்தி விடுமோ அல்லது கையை நகத்தால் கிழித்து விடுமோ என்று சுமார் அரை மணி நேரம் அதன் அருகே பயந்து செய்வதறியாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் அவ்வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் ஐயப்பன் என்பவர் துணிச்சலுடன் ஆந்தையை நான் பிடித்து தருகிறேன் என்று கூறி ஒரு பெரிய துணியை ஆந்தை மேல் போர்த்தி சாதூர்த்தியமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். ஆந்தையை துணிச்சலாக பிடித்த ஆட்டோ டிரைவர் ஐயப்பன் என்பவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.