பஸ்சுக்கு காத்து நின்ற பெண்ணை இடித்து தள்ளிய பைக்

விபத்து
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதி வடக்கு விளையை சேர்ந்தவர் இராஜகுமார் மனைவி பிரேமலதா (49). இவர் சம்பவ தினம் கூட்டாலுமூடு கோவில் பகுதியில் பஸ் ஏறுவதற்காக பஸ் நிறுத்தத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது தேங்காபட்டணம் - புதுக்கடை சாலையில் வேகமாக வந்த பைக் ஒன்று சாலையோரம் நின்ற பிரேமலதாவை இடித்து தள்ளியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தில் பைக்கை ஒட்டிய நபர் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் பைக்கின் பின்னால் இருந்த தொலையாவட்டம் பகுதி ஜாண்சன் மகன் ஜோஸ்வா (21) என்பவரும் காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, பிரேமலதா, ஜோஸ்வா ஆகியோரை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பியோடிய நபர் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
