சகோதரர்கள் உட்பட 4 பேரின் உடல்கள் மீட்பு
ஆத்தூர் பாலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18ஆம் தேதி பெய்த அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், மேல ஆத்தூர் சுப்பிரமணியபுரம் சண்முகவேல் மகன்கள் சேகர் (45), அருள்ராஜ் (37) ஆகிய 2பேரும் கடந்த 18 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர். இது தொடர்பாக அவர்களது தம்பி கனகராஜ் என்பவர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் ஆத்தூர் பாலத்தின் கீழ்பகுதியில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுபோல் முக்காணி காமராஜ் நகரைச் சேர்ந்த திருவாண்டி மனைவி அனந்தம்மாள் (70) என்பவரது வீடு கடந்த 18ம் தேதி வெள்ளத்தில் மூழ்கியது. இதில் அவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பங்கள் குறித்து ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டனம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த சேர்மபாண்டி மகன் சுரேஷ்குமார் (44) என்பவர் கடந்த 19ம் தேதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் நேற்று காரைக்கால் அம்மன் கோவில் அருகே ஒதுங்கியது. இது தொடர்பாக குலசேகரன்பட்டனம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.