சீனாவில் பலியான மருத்துவ மாணவி உடல் சொந்த ஊரில் தகனம்
கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு ஊராட்சி பகுதியான புல்லந்தேரி பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், ஜவுளி வியாபாரி. இவரது மகள் ரோகிணி (27) சீனா நாட்டில் மருத்துவ படிப்பிற்காக சென்றிருந்தார். படிப்பை முடித்து சொந்த ஊருக்கு திரும்ப தயாராக இருந்துள்ளார். பெற்றோரும் மகளுக்காக காத்திருந்தனர். ஆனால் சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரோகிணி மருத்துவமனையில் இறந்து விட்டதாக கோபால கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.
ரோகிணியின் குடும்பத்தார் மகளின் உடலை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 51 நாட்களுக்கு பிறகு ரோகிணி உடல் நேற்று சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. புல்லந்தேரியில் வீட்டிற்கு கொண்டு வந்த மாணவியின் உடலுக்கு ஊர் மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு மாணவியின் உடலை கண்ணுமாமூட்டில் அவரது குடும்ப கல்லறை தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.