வீட்டில் புதைக்கப்பட்ட தாயின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை!
தூத்துக்குடி அய்யனடைப்பு சிவசக்திநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயினும் குலாப்தின். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றிய இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இதையடுத்து இவருடைய மனைவி ஆஷா பைரோஸ் (44) தனது மகன் முகமது குலாம் காதர் (22) உடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கடந்த 7-ந்தேதி இரவில் ஆஷா பைரோசின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று ஆஷா பைரோசின் வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் புதிதாக கட்டிய தரைமட்ட தொட்டியில் ஆஷா பைரோசின் உடல் வைக்கப்பட்டு, அரைகுறையாக மண்ணைப்போட்டு புதைத்தது தெரிய வந்தது. மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஷா பைரோசின் மகன் முகமது குலாம் காதரிடம் விசாரணை நடத்தினர். மேலும் புதைக்கப்பட்ட ஆஷா பைரோசின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலையில் தூத்துக்குடி தாசில்தார் பிரபாகர், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) அக்சய் அனில், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில், ஆஷா பைரோசின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் உதயகுமார், அருண் ஆகியோர் அங்கேயே உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு ஆஷா பைரோசின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ஆஷா பைரோஸ் எப்படி இறந்தார்? என்பது குறித்த விவரம் என்று தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆஷா பைரோசின் மகன் முகமது குலாம் காதரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.