சேலத்தில் பருப்பு மில்லில் நடந்த காவலாளி கொலை வழக்கு
சேலத்தில் பருப்பு மில்லில் நடந்த காவலாளி கொலை வழக்கில் பீகார் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பளித்துள்ளது
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் பருப்பு மில் நடத்தி வருகிறார். இவரது மில்லில் கொண்டலாம்பட்டியை சேர்ந்த தங்கையன் (வயது 59) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். மேலும், இந்த மில்லில் பீகாரை சேர்ந்த அமர்ஜித்குமார் என்ற சோனுகுமார் (20) என்பவரும் பணிபுரிந்து வந்தார். இவர் பணியில் சேர்ந்த சில நாட்களில் மாரிமுத்துவிடம் முன்பணம் கேட்டுள்ளார். அப்போது, அவர் ஒரு மாதம் ஆனவுடன் பணம் தருவதாக கூறியுள்ளார்.
இதனிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந் தேதி அன்று இரவு பருப்பு மில்லின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து உள்ளே நுழைந்த அமர்ஜித்குமார், அங்குள்ள மேலாளரின் அறைக்கு சென்றார். பின்னர் அங்கு கல்லா பெட்டியில் வைத்திருந்த பணத்தை எடுக்க முயன்றபோது, சத்தம் கேட்டு காவலாளி தங்கையன் வந்துள்ளார். இதையடுத்து அவர் அருகில் இருந்தவர்களை அழைக்க முயன்றார். ஆனால் அதற்குள் அமர்ஜித்குமார் வெளியே வந்து காவலாளி தங்கையனை அங்கிருந்த கட்டையால் அடித்தும், பருப்பு மூட்டையை போட்டு அமுக்கியும் கொலை செய்தார். இதையடுத்து மில்லில் இருந்து ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பீகாருக்கு தப்ப முயன்ற அமர்ஜித்குமாரை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார். இதில் குற்றம்சாட்டப்பட்ட அமர்ஜித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.