மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் இன்று ஆய்வு
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளவும், மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர் பெருமக்கள் மற்றும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், அப்பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழு தேசிய பேரிடர் மீட்புக் குழு தீயணைப்புத்துறை, காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.