குப்பை கிடங்கை முதலமைச்சர் பார்வையிட வேண்டும்
வெள்ளலூர் குப்பை கிடங்கை முதல்வர் பார்வையிடாவிட்டால் உண்ணாவிரதம் நடத்தப்படும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அறிவித்துள்ளனர்.
கோவைக்கு வரும் முதல்வர் வெள்ளலூர் குப்பை கிடங்கை பார்வையிட வேண்டும் எனவும் இல்லையெனில் குப்பை கிடங்கில் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பொள்ளாச்சியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.இதற்காக விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் சாலை மார்கமாக பொள்ளாச்சி செல்ல உள்ளார்.
இந்நிலையில் கோவைக்கு வரும் முதலமைச்சர் வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை பார்வையிட்டு அப்பகுதி மக்களின் பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தி உள்ளார்.
கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கை முறையாக மேலாண்மை செய்யாததால் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ள ஈஸ்வரன் நாளை மறுநாள் கோவைக்கு வரும் முதலமைச்சர் வெள்ளலூர் குப்பை கிடங்கை பார்வையிட்டு அப்பகுதி மக்களின் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும் இல்லையெனில் குப்பை கிடங்கின் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.