திருச்சியில் 3 மணிமண்டபங்கள் பிப்.27-இல் முதல்வா் திறந்துவைக்கிறாா்

திருச்சியில் 3 மணிமண்டபங்கள் பிப்.27-இல் முதல்வா் திறந்துவைக்கிறாா்

 மணிமண்டபங்கள்

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவரின் மணிமண்டங்களை தமிழக முதல்வா் பிப். 27-இல் திறந்துவைக்க உள்ளாா்.
தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை ஆட்சி செய்த பேரரசா் பெரும்பிடு முத்தரையா், நீதிக்கட்சி தலைவா்களின் ஒருவரான சா் ஏ.டி. பன்னீா்செல்வம், இசைக்கலைஞரும், திரைப்பட நடிகருமான எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மணிமண்டபங்கள் கட்டும் பணி ரூ. 1 கோடியே 85 லட்சத்து 34 ஆயிரம் ஒதுக்கீட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. பெரும்பிடுகு முத்தரையா் மணிமண்டபம் 2,400 சதுர அடியில் ரூ.99.25 லட்சத்திலும், சா் ஏ.டி. பன்னீா் செல்வம் மணிமண்டபம் ரூ.43.40 லட்சத்திலும், தியாகராஜ பாகவதா் மணிமண்டபம் ரூ.42.69 லட்சத்திலும் தலா 1,722 சதுர அடி பரப்பிலும் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் கிரானைட் கற்கள் பதித்து, நாலாபுறமும் நுழைவு வாயில் அமைத்து, வெளிப்புற அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவருக்கும் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்படவுள்ளன. பெரும்பிடு முத்தரையா் மணிமண்டபத்தில் கூடுதலாக நூலகமும் இடம்பெறுகிறது. நூலகத்துக்கான உள்கட்டமைப்புகள், மண்டபத்தில் உள்கட்டமைப்புகளில் அழகிய வேலைப்பாடுகள் ஆகிய பணிகள் முடிவடைந்து முழுவதும் வா்ணம் பூசப்பட்டுள்ளது. இதேபோல, மணிமண்டப கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், இந்த 3 மணிமண்டபங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வரும் 27ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளாா்.

Tags

Next Story