மகாணிப்பட்டு கிராமத்தில் மண்மாதிரிகள் சேகரிப்பு

மகாணிப்பட்டு கிராமத்தில் மண்மாதிரிகள் சேகரிப்பு

மண் மாதிரிகள் சேகரிப்பு

சுற்றுச்சூழலை பாதுகாக்க மண் பரிசோதனை செய்வது அவசியம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

காவேரிப்பாக்கம் அருகே உள்ள மகாணிப்பட்டு கிராமத்தில் மண்மாதிரிகள் சேகரிப்பு வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில்,"விவசாயிகள் மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை செய்து, பரிந்துரைக்கப்பட்ட கனிம உரங்களையும், இயற்கை உரங்களையும் அதிகமாக உபயோகிக்க வேண்டும். ரசாயன உரங்களை, தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். எனவே விவசாயிகள் ரசாயன உரங்கள் அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும், சுற்றுசூழலை பாதுகாப்பதற்கும் மண் பரிசோதனை செய்வது அவசியமாகும். இதேபோல் பயிர் அறுவடைக்கு பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும். இதனால் மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியமாகும். மண் வளத்தை நிலைநிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி, மற்றும் லாபத்தை மேம்படுத்தலாம்.

பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகத்திறன் முதலியவற்றை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைத்திட வேண்டும். எனவே விவசாயிகள் தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிர் உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் தகவலுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்,"என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story