கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு!

கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு!

ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அணைப்பாளையத்தில் இன்று (21.5.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ''நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் மிக அதிமான மழை பொழிவு பதிவாகி உள்ளது. அதில் அணைபாளையம் கிராமம் தாழ்வான பகுதியாக உள்ளதால் ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை மூலமாக நீர் வெளியேற கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் அவற்றை மண் மூடியதால் மழை நீர் வெளியேற முடியவில்லை. உடனடியாக இப்பகுதியில் நீர் தேக்கி உள்ள தகவல் கிடைத்தவுடன் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் உடனடியாக 3 ஜே.சி.பி வாகனங்கள் மூலம் மழை நீர் தங்கு தடையின்றி வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் 12 வீடுகள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகள் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் உடனடியாக பிளீசிங் பவுடர் போட்டு சுத்தம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு முதல் இப்பகுதி மக்கள் கோவில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், உணவு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இப்பகுதி மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளது. நெடுஞ்சாலை பகுதிகளில் நீர் வெளியேறும் கால்வாய்கள் அடைப்பட்டுள்ளாத என்பது குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதத்தில் 5 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தபட்டுள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் இல்லை. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் டெங்கு பரவாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.'' என தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளில் இராசிபுரம் வட்டாட்சியர் திரு.சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story