வெயிலின் தாக்கத்தால் நாட்டு மிளகாய் மகசூல் குறைவு

வெயிலின் தாக்கத்தால் நாட்டு மிளகாய் மகசூல் குறைவு

மிளகாய் செடி 

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் நாட்டு மிளகாய் மகசூல் குறைந்துள்ளது.

செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான ஆத்துார், கருநிலம், திம்மாவரம், வில்லியம்பாக்கம், செட்டிப்புண்ணியம், குருவன்மேடு, பாலுார் உள்ளிட்ட கிராமங்களில், விவசாயமே பிரதான தொழில். நன்செய் நில விவசாயிகள், ஆடி பட்டம் மற்றும் கார்த்திகை பட்டத்தில், நெல், நிலக்கடலை போன்றவற்றை பயிரிடுகின்றனர். அதே போல தோட்டக்கலை பயிர்களான வாழை, புடலை, கத்தரி,வெண்டை, பச்சை மிளகாய் போன்றவற்றையும் குறிப்பிட்ட அளவு பயிரிடுகின்றனர். இது போன்று பயிரிடும் விவசாயிகளில் பெரும்பாலானோர், தங்களின் நிலத்தில் ஒரு பகுதியில் தங்கள் வீட்டு தேவைக்காக, நாட்டு மிளகாய், குண்டு மிளகாய், உளுந்து போன்றவை பயிரிடுவது வழக்கம். இவ்வாறு பயிரிடப்பட்டு இருந்த மிளகாய் செடி, கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையின் தாக்கம் காரணமாக, நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நாட்டு மிளகாய், குண்டு மிளகாய் போன்றவற்றின் விலை, 1 கிலோ 350 ரூபாய் துவங்கி, 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனால், பெரும்பாலான விவசாயிகள் மார்கழி மாத கடைசி நாளான போகி பண்டிகை அன்று, மிளகாய் செடியை நடவு செய்வர். சரியான முறையில் பராமரித்து வந்தால், 80 நாட்களில் மிளகாய் பழம் பழுக்க துவங்கி விடும். இரண்டு கட்டங்களாக நல்ல மகசூல் கிடைக்கும். கடந்த ஒரு மாதமாக, அதிக அளவில் வெயிலின் தாக்கம் உள்ளதால், பூமியின் உஷ்ணம் தாங்காமல் செடிகள் மஞ்சள் நிறத்திலும், இலைகளில் சுருக்க நோயும் ஏற்பட்டு, பூக்கள் கருகி விடுகின்றன. தற்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தி உள்ளோம். இருப்பினும். இந்த ஆண்டு மகசூல் குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story