ஆளுநர் தலையில் கொட்டு வைத்த கோர்ட் -தொல் திருமாவளவன்

ஆளுநர் தலையில்  கொட்டு வைத்த  கோர்ட் -தொல் திருமாவளவன்

தொல் திருமாவளவன்

ஆளுநர் தலையில் நீதிமன்றம் கொட்டு வைத்திருக்கின்றது என தொல் திருமாவளவன் கூறினார்.

கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அயோத்திதாசர் மணிமண்டபம் என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். டிசம்பர் 23ல் திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெறுகிறது எனவும் இதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்கின்றனர் என தெரிவித்தார்.

ஐந்து மாநில தேர்தல் வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வந்திருப்பது ஆறுதல் அளிக்கின்றது எனவும் கர்நாடக மாநிலத்தில் பாடம் புகட்டியதை போல ஐந்து மாநிலத்திலும் பா.ஜ.கவிற்கு தோல்வியை கொடுப்பார்கள் என நாடே எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கான செல்வாக்கு கூடி இருக்கின்றது என தெரிவித்த அவர் பா.ஜ. கவை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தியா கூட்டணியின் செயல்பாடு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் தமிழக அரசுக்கும் திமுகவிற்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்படுகின்றார் எனவும் பல்கலைகழக மசோதாக்கள் திருப்பி அனுப்பியது அரசமைப்பு சட்ட விரோத்ததை காட்டுகின்றது எனவும் தெரிவித்தார்.

பல்கலை கழக வேந்தர் நியமனங்கள் முதல்வரால் என்பதை ஆளுநரால் சகிக்க முடியவில்லை எனவும் தனியார் பல்கலை கழக வேந்தர்களாக உரிமையாளர் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றார். ஆனால் முதல்வர் அரசின் பல்கலை கழகங்களுக்கு வேந்தராக இருப்பது ஆளுநரால் ஏற்க இயலவில்லை எனவும் தெரிவித்தார். தமிழக ஆளுநரின் போக்கை சுட்டிகாட்டி நீதிமன்றம் கண்டித்து இருக்கின்றது எனவும் உச்சநீதிமன்றம் கொட்டு வைப்பதற்கு முன்பு ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஏற்கனவே விடுதலைகள் சிறுத்தைகள் சொல்லி இருந்தோம் எனவும் தெரிவித்தார்.

ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்த நிலையில் அவரது தலையில் கொட்டு வைத்திருக்கின்றது எனவும் தீர்ப்பை மதிப்பார் என நினைக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பார் என நினைக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

ஈரோடு இந்திரா நகரில் தலித் இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.பிரதமர் யார் என்ற விவாதம் இப்போது இந்தியா கூட்டணியில் நடக்கவில்லை எனவும் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் கூடி முடிவு செய்வோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Tags

Next Story