முதியவர் மரணம் - 7 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள நெக்னாமலை கிராமத்தில் 172 குடும்பங்களை சேர்ந்த 750 பேர் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இன்று வரை சாலை வசதி இல்லாததால் தொடர்ந்து மக்கள் அன்றாட தேவைக்கும் மற்றும் மருத்துவ தேவைக்கும் 7 கிலோமீட்டர் நடந்தே சென்று வரக்கூடிய சூழ்நிலையாக உள்ளது.
அதே நேரத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்டாலும் சரி, உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் சரி டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது. இதனை அறிந்த சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் சென்று புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார்.இதை தொடர்ந்து தற்போது அந்த சாலையில் கற்கள் பெயர்ந்து ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் உள்ளது.
இந்நிலையில் அந்த மலை கிராமத்தை சேர்ந்த முத்து (78) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் வேலூரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் திடீரென உயிரிழந்த நிலையில் உயிரிழந்த முதியவரின் உடலை சொந்த ஊரான நெக்னாமலை கிராமத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் மீண்டும் சடலத்தை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் தொடர்கிறது. சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் மலை கிராமத்தில் சாலைவசதி இல்லாமல் மீண்டும் டோலி கட்டி தூக்கி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மலை கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.