பாலின வள மையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் - அரசு அலுவலர்கள் பங்கேற்பு

பாலின வளமையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் “பாலின வள மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் திறந்து வைத்து தெரிவிக்கையில், பெண்கள் வன்முறையில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கும், மருத்துவம், சட்டம் மற்றும் மனரீதியான ஆலோசனைகளை வழங்கி, பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், முன்னதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் பெண்கள் மனதைரியத்துடன் வாழ்ந்து காட்டுவது, பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் காத்திடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சிவகங்கை அரசு கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதில், குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்கள், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோர்களுக்கு காவல் உதவி, சட்ட உதவி, மருத்துவ உதவி, மனநல ஆலோசனைகள் மற்றும் குறுகிய கால தங்கும் வசதி போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம் மற்றும் ஆலோசனை வழங்கிடுவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியிலுள்ள சமுதாய சேவை மைய கட்டிடத்தில் “பாலின வள மையம்” இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்களுக்கு வீட்டிற்குள்ளேயும் ஏற்படும், குடும்ப பிரச்சனைகள், வரதட்சனை பிரச்சனை, பாலியல் பிரச்சனை மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் போன்றவற்றிற்கு உதவிடும் பொருட்டும், அவர்களின் மனநலத்தினை சீராக வைத்துக் கொள்வதற்கு ஏதுவாகவும், இம்மையம் பேருதவியாக அமையும். எனவே, பெண்கள் தங்களுக்கான பிரச்சனைகள் தொடர்பாக சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள “பாலின வள மையத்தினை” நேரில் அணுகியும் அல்லது கட்டணிமில்லா தொலைபேசி எண்ணான 04565 – 232244 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு, பயன் பெறலாம். முன்னதாகவே மகளிருக்கென 181 என்ற உதவி எண்ணும் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடதக்கதாகும்.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டங்கள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் போதுமான விழிப்புணர்வும் பெண்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பு மற்றும் சட்டங்களை பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்று வருபவர்கள், மற்றவர்களுக்கும் இதுகுறித்து எடுத்துரைத்து பயன்பெறச் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்
