நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த கருத்தரங்கு

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம் பெண்கள் கல்லூரியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த மாவட்ட அளவிலான கொள்கை கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த மழை நீரை முறையாக சேமித்து வைப்பதன் மூலமாக நாம் செய்யக்கூடிய விவசாயத்தை இன்னும் அதிக நாட்கள் செய்ய முடியும். பெரும்பாலும் தண்ணீர் பற்றாக்குறை என்பது மனிதர்களால் உருவாக்கப்படுவது தான் என்கிறார்கள். நாம் முறையாக தண்ணீரை செலவழித்து நமது பகுதிகளில் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய நீர் நிலைகளை பாதுகாத்தாலே விவசாயத்தை நல்லபடியாக செய்ய முடியும்.
நீர்நிலை ஆக்கிரமிப்பை விட மிகவும் மோசமானது, நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமிப்பது. உள்ளாட்சி அமைப்புகள் நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இறைச்சி கடைகளில் உருவாக்கக்கூடிய கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுகிறார்கள். இதனால் தொற்று நோய்கள் வரக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் இதனை முறையாக கண்காணித்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உலகத்தின் சில நாடுகளிலும், நம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கூட தண்ணீருக்காக தனி மனிதன் பல மணி நேரம் செலவிட வேண்டிய நிலை உள்ளது.
உலகில் பல நாடுகளில் மிக மிக குறைவான தண்ணீரை முறையாக பயன்படுத்தி பல மடங்கு விவசாயம் செய்து வருகின்றனர். எனவே முழுமையாக விவசாயத்தை நம்பி வாழக்கூடிய நம்முடைய பகுதி பொது மக்கள் இணைந்து நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு பண்ணக்கூடாது என உறுதி கொள்ள வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செயல்பட வேண்டும். அரசு அலுவலர்கள் தொடர்ச்சியாக பல்வேறு நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
ஆனால் நடைமுறையில் அதில் இருக்கக்கூடிய சிக்கல்களை களைவதற்கு பொதுமக்கள், விவசாயக் குழு பெருமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அதற்கு வேண்டிய நிதியை பல்வேறு துறைகளை வாயிலாகவும், நிதி இல்லாத பட்சத்தில் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்தும் வழங்குவதற்கு நிச்சயமாக மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது.
அரசு நிர்வாகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகள், தனியார் நிறுவனங்கள், விவசாய பெருங்குடி மக்கள், சங்கங்கள், பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகள் என அனைவரும் இணைந்து செயல்பட்டால் நிச்சயமாக மனிதன் வாழ்வதற்கு ஆதாரமாகஇருக்கக்கூடிய நீர் நிலைகளை நாம் பாதுகாக்க முடியும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் கூறினார்.
