மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் திராவிட மாடல் அரசு

தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு பிற மாநிலங்களும் பின்பற்றத்தக்க வகையில் அமைந்துள்ளன என நாமக்கல்லில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக மாநில இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நாமக்கல்லில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, திமுக மாநில இளைஞரணி செயலாளர் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாமக்கல் பூங்கா சாலையில், திறந்தவேனில் நின்றபடி அவர் பேசும்போது, சென்ற 2019 பாராளுமன்ற தேர்தலில் , கூட்டணி வேட்பாளரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாச வெற்றி பெற வைத்துள்ளதை போல, இந்த முறை 2024 பாராளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் V.S. மாதேஸ்வரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நாமக்கல் தொகுதியில் புறவழிச் சாலை 194 கோடி நடைபெற்று வருகிறது. நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 100 கிலோ மீட்டர்களுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 388 கோடியில் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 24 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும். நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். மோகனூர் ரூ. 24 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

நாமக்கல்லில் ரூ. 90 கோடியில் பால் பதப்படுத்தும் ஆலை கட்டுமான பணிகள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும். மத்திய பாஜக அரசு சிலிண்டர் மீது விலை உயர்த்தி விட்டு, தேர்தலுக்காக 100 ரூபாய் குறைத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 65 ரூபாய்க்கும் வழங்கப்படும் என திமுக தலைவர் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். கடும் நிதி நெருக்கடியில் இருந்தபோது பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி திட்டம் பெருமளவில் பயன் தருகிறது. மாதம் 900 ரூபாய் வரை சேமிக்கிறார்கள். 460 கோடி பயணங்கள் இதுவரை இதன் மூலம் கிடைக்கப்பட்டுள்ளது. 8 கோடி பயணம் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளனர்.

ஸ்டாலின் பேருந்து என அழைக்கும் அளவிற்கு இந்த திட்டம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திட்டத்தை கர்நாடக மாநில அரசு பின்பற்றி தொடங்கியுள்ளது. அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் இதுவரை 3 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். திட்டத்தில் 16 ஆயிரம் மாணவிகள் நாமக்கல் மாவட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 31,000 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. தெலுங்கானா, கர்நாடக மாநிலங்கள் இத்திட்டத்தை பின்பற்றி தொடங்கியுள்ளன. கனடா நாட்டிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 44,000 மாணவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் காலை உணவு பெறுகின்றனர். அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக இருப்பது தான் திராவிட மாடல் அரசாங்கம் ஆகும்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மத்திய அரசு நிதி ஒதுக்காத போதும், இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஒரு கோடியே 16 லட்சம் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் விரைவில் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். இதுபோன்ற எண்ணற்ற பல சாதனைகளை திமுக அரசு செய்து வருகிறது. ஆனால் மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. கொரோனாவிற்கு இழப்பீடு மத்திய அரசு வழங்கவில்லை. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாகியுள்ளது. தேர்தல் நெருங்கியுள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார்.

2026 சட்டமன்றத் தேர்தல் வரை தமிழகத்திலேயே அவர் தங்கி இருந்தாலும் தமிழகத்தில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாது. சரக்கு - சேவை வரியில் இருந்து மிகவும் குறைவான நிதியே தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. ஆனால் உத்திரபிரதேசம், பிஹார் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக நிதியை வழங்கி வருகிறார்கள். தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. நிதி, கல்வி, மொழி ஆகிய உரிமைகளை அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்றால், இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கூட்டணியினர் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும். அதேவேளையில் மத்திய அரசின் பாதிப்புகளை எடுத்துக் கூறவேண்டும். அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு கிடைக்க இந்தியா கூட்டணி ஆதரிக்க வேண்டும் என்றும் நாமக்கல் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Tags

Next Story