காலை உணவுத் திட்டம் கனடாவிலும் செயல்படுத்தப்படுவது தான் திராவிட மாடல் அரசு

காலை உணவுத் திட்டம் கனடாவிலும் செயல்படுத்தப்படுவது தான் திராவிட மாடல் அரசு

வாக்கு சேகரித்த திமுகவினர்

காலை உணவுத் திட்டம் கனடா நாட்டிலும் செயல்படுத்தப்படுவது தான் திராவிட மாடல் ஆட்சியின் வெற்றி என திமுக வேட்பாளர் ச.முரசொலி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும், திமுக வேட்பாளர் ச.முரசொலி, திருவோணம் வடக்கு, தெற்கு ஒன்றியத்தில், திங்கள்கிழமை அன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டாத்தி, உஞ்சியவிடுதி, வல்லம்பகொல்லை, அதம்பை வடக்கு, அனந்த கோபாலபுரம், காயாவூர், வெங்கரை, கோட்டைக்காடு, தோப்பநாயகம், சென்னிய விடுதி, நெய்வேலி வடபாதி, நெய்வேலி தென்பாதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "காட்டாத்தியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அரசுடமை வங்கி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். வல்லம்பக்கொல்லை பகுதியில் பகுதி நேர அங்காடியும், சாலை வசதியில் 75 விழுக்காடும் அமைத்து தரப்பட்டுள்ளது. நலத்திட்டங்களை நாம் செய்து தர, மத்தியில் நமக்கு ஆதரவான அரசு அமைய வேண்டும். திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சொன்ன திட்டங்கள் மட்டும் இல்லாமல், சொல்லாத திட்டமான காலை உணவு திட்டம் வரை செயல்படுத்தி வருகிறோம். திராவிட மாடல் ஆட்சியின் இந்த திட்டம் பல வட மாநிலங்களில் மட்டுமல்ல, கனடாவிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதான் திராவிட மாடல் அரசின் வெற்றி.

அதம்பை ஏரி தூர்வாரப்படும். அனந்தகோபாலபுரம் அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரப்படும். வெகு விரைவில் இப்பகுதியில் துணை மின் நிலையம் கொண்டு வரப்படும். தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்து மட்டங்களையும் சென்றடைந்துள்ளது.

பொதுமக்களின் வரவேற்பில் இதைக் காண முடிகிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டு அவற்றை நிறைவேற்றி தருவேன்" இவ்வாறு பேசினார். இந்த பிரச்சாரப் பயணத்தில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும்,

திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா.அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி எம்எல்ஏவுமான நா.அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி, திமுக ஒன்றியச் செயலாளர் சோம.கண்ணப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், பேராவூரணி தொகுதி பொறுப்பாளர் நாகை மனோகரன் மற்றும் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மதிமுக, ம.நீ.ம, உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்றனர்.

பிரச்சாரப் பயணத்தில் வெங்கரையில் மாட்டு வண்டியில் ஏறி, வண்டியை ஓட்டியவாறு முரசொலி வாக்குச் சேகரித்தார். நெய்வேலியில் நாட்டியக் குதிரைகள் நடனமாட, சாரட் வண்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story