நிழற்குடையை உடைத்து கொண்டு வெளியேறிய குடிநீர்

நிழற்குடையை உடைத்து கொண்டு வெளியேறிய குடிநீர்
வெளியேறிய குடிநீர் 
திருச்சுழி அருகே மறையூர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து பயணிகள் நிழற்குடையை உடைத்துக் கொண்டு குடிநீர் பீறிட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சுழி அருகே நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மறையூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொதுமக்கள் வசதிக்காக ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்குடையின் கீழ் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய்கள் செல்வதாக கூறப்படுகிறது. இந்த பயணிகள் நிழற்குடையின் கீழ் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் செல்வது தெரிந்தும் பில்லர் அமைத்து இந்த பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பயணிகள் நிழற்குடையை திமுக ஒப்பந்தக்காரர் இசலி ரமேஷ் என்பவர் கட்டியுள்ளார். இவர் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நான்காவது வார்டு திமுக கவுன்சிலர் அன்புச்செல்வி என்பவரது கணவர் ஆவார். மேலும் இந்த பயணிகள் நிழற்குடையை கடந்த 7.2.24 அன்று தான் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இந்த நிலையில் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக அங்கு குழாய்கள் சேதம் அடைந்து இருந்ததால் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது குழாய்கள் சீரமைக்கப்பட்டு கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில் குடிநீர் சீறிப்பாய்ந்ததாலும், மேலும் ஏற்கனவே அதன் மேல் கட்டப்பட்டிருக்கும் பயணிகள் நிழற்குடையின் அழுத்தம் காரணமாகவும் குடிநீர் குழாய்கள் மடாரென உடைந்து பயணிகள் நிழற்குடையை உடைத்துக் கொண்டு தண்ணீர் சீறிப்பாய்ந்தது.

இதனால் பயணிகள் நிழற்குடையில் இருந்து காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் வெளியேறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் புதிதாக கட்டப்பட்டு அதுவும் நிதி அமைச்சரால் திறக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையின் கீழ் பகுதியில்(பேஸ்மட்டம்) இருந்த மண், சிமெண்ட் அனைத்தும் கரைந்து தண்ணீரோடு வெளியேறியது. இதனால் பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் ஆபத்தான சூழலில் உள்ளது. பயணிகள் நிழற்குடையின் ஒப்பந்தகாரர் ரமேஷ் மீது முறையாக பணிகள் செய்வது கிடையாது என பல்வேறு புகார்கள் உள்ளது. இந்த நிலையில் தற்போது பயணிகள் நிழற்குடை திறக்கப்பட்டு 6 நாட்களில் இதுபோன்று அலட்சியத்தால் சேதமடைந்து வீணானது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story