கணக்கெடுக்க சென்ற மின் கணக்கீட்டாளருக்கு அடி
கணக்கெடுக்க சென்ற மின் கணக்கீட்டாளரை தாக்கிய விவகாரத்தில் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்காததால் மின் ஊழியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மின் கணக்கீடு செய்யச் சென்ற, மின் கணக்கீட்டாளரை வீட்டு உரிமையாளர் அடித்து உதைத்ததில், பலத்த காயங்களுடன் மின் ஊழியர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கியவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படாததால் மின் ஊழியர்கள் அதற்கு அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ரெகுநாயகிபுரம் கிராமத்தில் மின்வாரிய ஊழியர் அய்யப்பன் (வயது 28) என்பவர் கடந்த 3 தினங்களுக்கு முன், மின் கணக்கீடு செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது அய்யாசாமி என்பவரின் வீட்டில் மின் அளவீடு செய்து, ரூ.560 பணம் கட்ட வேண்டும் என்ற தகவலை, வீட்டின் உரிமையாளர் அய்யாசாமி என்பவரிடம் கூறியுள்ளார். அப்போது அய்யப்பன் மின் கட்டணத் தொகையை கூடுதலாக சொல்வதாகக் கூறி, கோபமடைந்த அய்யாசாமி, "நீ கணக்கை தவறாக குறிப்பிட்டுள்ளாய். சரியாக சொல்லிவிட்டு போ" என்று மின் ஊழியர் அய்யப்பனிடம் தகராறு செய்துள்ளார். "உங்களுக்கு ஏதேனும் இதில் சந்தேகம் இருந்தால் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்" என மின் ஊழியர் அய்யப்பன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அய்யாசாமி, அய்யப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அய்யாச்சாமியும் அவரது உறவினர்களும் சேர்ந்து அய்யப்பனின் சட்டையை கிழித்து செங்கல்லால் அடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மின் ஊழியர் அய்யப்பன் பலத்த காயமடைந்த நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி அய்யப்பன் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மின் ஊழியரை தாக்கிய வீட்டு உரிமையாளர் அய்யாசாமி மீது, காவல் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அய்யாசாமி தலைமறைவாக இருந்து வருகிறார். காவல்துறை மந்தமாக இருப்பதால், மின் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், வேலை நிறுத்தம் செய்யவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.