குமரியில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் இன்று
இந்தியாவிலே வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் குமரி மாவட்டத்தில் நடக்கிறது. பாரம்பரியமாக நடக்கும் இந்த சிவாலய ஓட்டமானது கிள்ளியூர் ,விளவங்கோடு ,கல்குளம் ஆகிய மூன்று தாலுகாக்களில் அமைந்துள்ள 12 சிவாலயங்களில் நடக்கும் ஓட்டமாகும்.
புதுக்கடை அருகே முஞ்சிறையில் அமைந்துள்ள முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து துவங்கும் இந்த ஓட்டம் திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றிகோடு கோவில்கள் வழியாக திருநட்டாலம் கோவிலில் வந்தடைவார்கள்.
இந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோபாலா கோவிந்தா என்ற கோசத்துடனும். சிவ நாமங்கள் பாடி செல்வது வழக்கமாகும். கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையான மக்களும், குமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்வார்கள். ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் 41 நாட்கள் மாலையிட்டு விரதம் மேற்கொள்வது வழக்கம்.
நேற்று மட்டும் ஏகாதசி விரதத்தை கடைபிடித்து இன்று மாலை முதல் முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து ஓட்டத்தை துவங்குவார்கள். பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் முஞ்சிறை திருமலை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
பாரம்பரிய முறைப்படி ஓட்டமும் நடையுமாக செல்லும் பக்தர்கள் ஒருபுறம் நடந்தாலும், ஓடமுடியாத பக்தர்கள் இருசக்கர வாகனங்கள், கார், வேன் போன்றவற்றில் சென்று சிவத்தலங்களை தரிசிக்கின்றனர்.
சிவாலய ஓட்டக்காரர்கள் கையில் விசிறியும், கோவில்களில் காணிக்கையிட சிறு துணிப்பையும் வைத்திருப்பார்கள். இந்த ஓட்டத்தின்போது பக்தர்கள் காவி அல்லது மஞ்சள் வேட்டி கட்டுவது வழக்கம். சாமி தரிசனத்தின் போது கருவறை சிவனைப் பார்த்து விசிறியால் வீசுவது இப்போதும் நடைமுறையில் உள்ளது.