சமுதாயநலக்கூடக் கட்டடம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்
சமுதாய கட்டிடம்
செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்துார் அடுத்து சோத்துப்பாக்கம் ஊராட்சி உள்ளது. வந்தவாசி- - செய்யூர் மாநில நெடுஞ்சாலை, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை என, வாகனங்கள் அதிக அளவில் கடந்து செல்லும் பரபரப்பான பகுதியில், சோத்துப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது.
இப்பகுதியில், விவசாயம் மற்றும் கட்டடத் தொழில் செய்யும், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், தங்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளை மதுராந்தகம், சித்தாமூர், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர். இதனால், பொருளாதாரசிக்கலும், வீண் அலைச்சலும்ஏற்படுகிறது.
எனவே, இப்பகுதியில் புதிதாக சமுதாய நலக்கூடக் கட்டடம் கட்டித்தர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், சோத்துப்பாக்கம் பகுதியில் சமுதாயநலக்கூடக் கட்டடம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து தர, ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சோத்துப்பாக்கம் அஞ்சுரம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம், முருகன் கோவில் அருகே காலியாக உள்ளது. அவற்றில், தரை வாடகை மட்டும் செலுத்தி, சமுதாயநலக்கூடக் கட்டடம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை, ஊராட்சி நிர்வாகத்தினர் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.